கூடங்குளம்,ஆக.29: நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை சபாநாயகர் அப்பாவு தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ராதாபுரம் வட்டம் செட்டிகுளம் ஊராட்சி, இருக்கன்துறை ஊராட்சி, அடங்கார்குளம் ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் செட்டிகுளம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அரசுத்துறையின் சேவைகள் அனைத்தும் மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்கும் மக்களுடன் முதல்வர் திட்டம் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 15 துறைகளின் மூலம் வழங்கப்படும் சேவைகள் அந்தந்த ஊர்களுக்கே சென்று வழங்கப்படுவது இந்த முகாமின் சிறப்பம்சமாகும்.
இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் வருவாய், உள்ளாட்சி,காவல்,பொது சுகாதாரம், தொழிலாளர் நலம், மாற்றுத்திறனாளிகள் நலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், பிற்படுத்தப்பட்டோர் நலம், கால்நடை துறை உள்ளிட்ட 15 துறையில் சார்பில் வழங்கப்படும் 50-க்கும் மேற்பட்ட சேவைகளை அவரவர் பகுதியிலேயே பெற்றுக்கொள்ள முடியும்.
செட்டிகுளத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் செட்டிகுளம் ஊராட்சி, இருக்கன்துறை ஊராட்சி மற்றும் அடங்கார்குளம் ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சேவைகளுக்கான விண்ணப்பங்களை முழுமையான ஆவணங்களுடன் சமர்ப்பித்தனர். விண்ணப்பங்களை பதிவு செய்து எந்தெந்த துறையில் சேவைகளை பெற வேண்டுமோ அந்த துறையின் அரங்கிற்கு சென்று விண்ணப்பங்களை கொடுத்து அதற்கான விவரங்களையும் கேட்டு தெரிந்து மனு ரசீதையும் பெற்றுகொண்டனர். பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பத்தின் மீது அதிகபட்சம் 30 நாட்களுக்குள் முழுமையான தீர்வு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், ராதாபுரம் தாசில்தார் கிருஷ்ணகுமார், வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் ராமன், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், வள்ளியூர் ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன், செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மா செல்வகுமார், இருக்கன்துறை ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா முருகேசன், அடங்கார்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி முருகேசன், கூடங்குளம் காவல் உதவி ஆய்வாளர் கணபதி, அரசு துறை உயர் அதிகாரிகள் மற்றும் செட்டிகுளம் லிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.