சங்கராபுரம், மே 20: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதியான தியாகராஜபுரம், பூட்டை, ஊராங்கனி, சிட்டந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நடவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை கடன் வாங்கி செலவு செய்து நெற்பயிர்கள் பயிரிட்டிருந்த நிலையில், திடீரென பெய்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் செஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் நவரை பருவத்தில் சுமார் 100 ஏக்கரில் நடவு செய்த நெற்பயிர்களை அறுவடை செய்ய தயாராக இருந்த நிலையில் தொடர் மழையால் நெற்கதிர்கள் முற்றிலும் சாய்ந்து அறுவடை செய்ய முடியாமல் தண்ணீரில் மூழ்கியும் பாதிப்பு ஏற்பட்டு அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
எதிர்பாராத கோடை மழை பலத்த காற்றுடன் வீசி பல்வேறு இடங்களில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் செங்கல் மற்றும் விவசாய தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக தொடர் மழையால் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்த நவரை நெற்பயிர்கள் சேதமடைந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கூலி உயர்வு, நெல் அறுவடைக்கு இயந்திர வாடகை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால் விவசாயிகள் தவித்து வரும் நிலையில் தற்போது மழையால் செஞ்சி பகுதியில் ஏராளமான விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.முஷ்ணம் பகுதியில் சாந்தி நகர், முடிகண்டநல்லூர், காவாலக்குடி, மழவராயநல்லூர், குமாரக்குடி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் குறுவை நெல் இயந்திர நடவு மூலம் பயிர் செய்துள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் முஷ்ணம் சுற்றுவட்டா பகுதியில் தொடர் மழை பெய்தது. இந்த மழையால் முஷ்ணம் பகுதி விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
முஷ்ணம் பகுதியில் 1000 ஏக்கர் பாதிப்பு
கடலூர் மாவட்டம் முஷ்ணம் பகுதியில் சாந்தி நகர், முடிகண்டநல்லூர், காவாலக்குடி, மழவராயநல்லூர், குமாரக்குடி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் குறுவை நெல் இயந்திர நடவு மூலம் பயிர் செய்துள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் முஷ்ணம் சுற்றுவட்டா பகுதியில் தொடர் மழை பெய்தது. இந்த மழையால் முஷ்ணம் பகுதி விவசாயிகள் சாகுபடி செய்துள்ள சுமார் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர். இதனால் முஷ்ணம் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரமல் உள்ளதால் நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுத்தியதாகவும், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி மற்றும் குளம் வடிகால் வாய்க்காலை முழுவதுமாக தூர்வாரி மழைநீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் அப்பகுதியினர், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.