விழுப்புரம், மே 15: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் மட்டும் 251 பேர் வேதியியல் பாடத்தில் சென்டம் எடுத்ததால் வினாத்தாள் கசிந்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேர்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் மாவட்ட முதன்ைம கல்வி அலுவலர் மறுத்துள்ளார். தேர்வில் முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 8ம்தேதி வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் 95.11 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 18வது இடத்தையும், அரசுப் பள்ளிகள் தேர்ச்சியில் 93.71 சதவீதம் பெற்று மாநில அளவில் 11வது இடத்தை பிடித்தது. கடந்த 3 ஆண்டுகளாக படிப்படியாக விழுப்புரம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது. இதனிடையே, செஞ்சி வட்டாரத்தில் பல தேர்வு மையங்களில் வேதியியல் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றதால் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்து சமூக வலைளதங்களில் பரவி வருகின்றன.
ெசஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 167 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதேபோல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 பேரும், அங்குள்ள அல்ஹிலால் தனியார் பள்ளியில் 35 பேர், அனந்தபுரம் அரசு பள்ளியில் 11 பேர், அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 14 பேர், சத்தியமங்கலம் அரசு பள்ளியில் 7 பேர் என செஞ்சி ஒன்றியத்தில் மட்டும் 251 பேர் வேதியியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். குறிப்பாக செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 167 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருப்பது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
அறிவியல் பாடங்களில் மிகவும் கடினமானது வேதியியல். இதில் முழு மதிப்பெண்கள் எடுப்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. மிகவும் கடினமாக படித்தால் மட்டுமே சாத்தியமாகும். குறிப்பாக விழுப்புரம் அரசு மாதிரி பள்ளியில் தேர்வு எழுதிய 101 பேரில் 6 பேர் மட்டும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இப்படியிருக்க விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியில் ஒரே பள்ளியில் 167 பேரும், அந்த ஒன்றியத்தில் 251 பேர் 100க்கு 100 வேதியியல் பாடத்தில் எடுத்திருப்பதால் வினாத்தாள் கசிந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சமூகவலை தளங்களிலும் இந்த தகவல் பரவி வருகின்றன. இந்த தகவல் குறித்து தேர்வுத்துறை விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மாவட்ட கல்வித்துறை அலுவலரிடம் கேட்டபோது தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஏதும் நடைபெறவில்லை. தேர்வுத்துறை விசாரணை தொடர்பாக எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவழகன் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதலின்படிதான் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் செஞ்சி வட்டார பள்ளிகளில் வேதியியல் தேர்வு நடைபெற்ற அன்று பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குநர் குழந்தைராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் வினாத்தாள் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தேர்வு மையங்களுக்கும் ெகாண்டு செல்லப்பட்டது. அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. மாணவ, மாணவிகளின் படிப்புதிறனை சோதித்து பாடவாரியாக சிறப்பு வகுப்புகள் நடத்தியதால் அதிகளவு தேர்ச்சியும், 100க்கு 100 மதிப்பெண்கள் பெறமுடிந்தது. மற்றபடி வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை என்று கூறினார்.