செங்கோட்டை, ஆக. 3: கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆரியங்காவு எடபாளையத்தில் காரும் மினி லாரியும் மோதிய விபத்தில் திருச்சியில் இருந்து சுற்றுலா வந்த 2 பேர் உயிரிழந்தனர். திருச்சியை சேர்ந்த ரமேஷ் (37), பெரியசெல்வன் (38), மணி, செந்தில்குமார், சுந்தரபாண்டியன் ஆகியோர் ஒரு காரில் குற்றாலத்திற்கு சுற்றுலா வந்தனர். நேற்று மாலை இவர்கள், கேரளாவுக்கு புறப்பட்டனர்.
கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆரியங்காவு எடப்பாளையத்தில் வரும்போது காரும், எதிரே ஆரியங்காவில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த மினி லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்ததுடன் காரில் இருந்த ரமேஷ், பெரியசெல்வன் ஆகியோர் உயிரிழந்தனர். மற்ற மூவரும் படுகாயங்களுடன் புனலூர் தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து தென்மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.