புழல்: செங்குன்றம் அருகே அம்மன் கோயில் கதவை உடைத்து 6 சவரன் தங்க நகை, 4 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். செங்குன்றம் அடுத்த பாலாவயல் பள்ளிகுப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நேற்று காலை பக்தர் ஒருவர் சாமி கும்பிட வந்தார். அப்போது, கோயிலின் கதவு மற்றும் உண்டியல்கள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே, இதுகுறித்து கோயில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அவர்கள், செங்குன்றம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளையடிக்கப்பட்ட கோயிலை பார்வையிட்டு விசாரித்தனர். பின்னர், கோயில் கருவறையில் சாமி சிலையில் இருந்த 6 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள், உண்டியல் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோயிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதில் பதிவான அடையாளங்களை வைத்து போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோயிலுக்குள் புகுந்து மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டிய இச்சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.