செஞ்சி, செப். 10: செஞ்சி அடுத்த கோணை ஊராட்சி காட்டு கொல்லை இருளர் குடியிருப்பு பகுதியில் விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் செஞ்சி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கி பழங்குடியின மக்களுக்கு சட்ட பாதுகாப்பு குறித்தும் தேவைகள் குறித்தும் விழிப்புணர்வை எடுத்துரைத்து பேசினார்.
பின்னர் பல்வேறு கோரிக்கை மனுக்களை பழங்குடியினர் வழங்கினர். இதில் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த மாசி என்பவரது மனைவி கோவிந்தம்மாள் சேலம் அடுத்த வாழப்பாடியில் கொத்தடிமையாக உள்ளதாகவும், அவரை மீட்டுத்தருமாறும் கூறியிருந்தார். நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் அனந்தபுரம் காவல் நிலையத்தில் மாசி புகார் கொடுத்தார்.
அதில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப செலவுக்காக ரூ.60 ஆயிரத்தை சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அண்ணன் மேடு கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரிடம் கடனாக பெற்று இருந்தேன். அதற்காக 3 ஆண்டுகளுக்கு முன்பு மாசி, மாசி மனைவி கோவிந்தம்மாள், மகள் தனலட்சுமி, மருமகள் மணி ஆகியோர் செங்கல் சூளையில் வேலை செய்து வருவதாக கூறியிருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிந்து கொத்தடிமையாக வேலை செய்து வந்த கோவிந்தம்மாளை உடனடியாக மீட்டு, வழக்குப்பதிந்து செங்கல் சூளை அதிபர் குமாரை கைது செய்தனர்.