திருவள்ளுர், ஜூன் 18: திருவள்ளுர் வட்டம், சிவன்வாயல் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த 6 தொழிலாளர்கள் சரியான உணவு, தண்ணீர் வசதி, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி பணிபுரிந்து வருதாக புகார் வந்தது. அதன்பேரில் மாவட்ட சட்டபணிகள் குழு செயலாளர் நளினிதேவி, வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் தினேஷ் குமார், வருவாய் ஆய்வாளர் பொன்மலர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒடிசா மாநிலம், பலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த சிபமாலிக் (30), விபஞ்சலி மாலிக் (25), பகாரட் நாக் (58), சாய்ரேந்திரி நாக் (45), ஹடு பரிகா (60), ஜென்ஹி பரிஹா (47) மற்றும் குழந்தை ஹாஹில் மாலிக் (3) ஆகியோர் அங்கு இருந்ததை கண்டுபிடித்தனர். இவர்களுக்கு முன்பணமாக ரூ.35 ஆயிரம் கொடுத்து அழைத்து வந்து, செங்கல் சூளையில் மின்சாரம் இல்லாத ஓலை குடிசையில் தங்க வைத்துள்ளனர். மேலும் சரியான உணவு, தண்ணீர் வசதி, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் அடிப்படை வசதி ஏதுமின்றி தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.
தொழிலாளர் குடும்பங்களுக்கு வாரத்திற்கு ரூ.1,000, செங்கற்களுக்கு ரூ.500 வீதம் குறைந்தபட்ச ஊதியம் அளித்துள்ளனர். மேலும், தொழிலாளர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லாமல், செங்கல் சூளையின் கணக்காளர் தங்கி இருந்த அறையில் ஊசி மற்றும் மருந்துகளை வைத்து போலி மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் செங்கல் சூளையின் கணக்குகளை ஆய்வு செய்தபோது, செங்கல் சூளை முறையாக பதிவு செய்து உரிம் பெறவில்லை என்பதும், வருகை பதிவேடு, ஊதியப் பதிவேடு ஏதும் பராமரிக்கப்படவில்லை என்பதும் தெரிந்தது. அனுமதிக்கப்பட்ட 8 மணிநேரத்திற்கு மேலாக 13 மணிநேரம் வரை வேலை செய்ததாகவும், கூடுதல் நேரம் பணிபுரிந்ததற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என மீட்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதாக தெரிவித்தபோது, தங்களுக்கு வழங்கப்பட்ட முன்பணம் ரூ.35 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரத்தை திருப்பி செலுத்திவிட்டு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
6 தொழிலாளர்களையும் மீட்டு திருவள்ளூர் அடுத்த காக்களூர் தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். மேலும் செங்கல் சூளை நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வெங்கல் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல்ராஜ் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மீட்கப்பட்ட 6 பேருக்கும் விடுவிப்பு சான்றிதழை சட்டப் பணிகள் ஆணை குழு செயலாளரும், மூத்த உரிமையியல் நீதிபதியுமான கே.நளினிதேவி முன்னிலையில் வருவாய் கோட்டாட்சியர் சு.ரவிச்சந்திரன் வழங்கினார். அப்போது மீட்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்தில் முதல் கட்டமாக ரூ.30 ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் போடப்பப்பட்டதாகவும், மீதமுள்ள பணம் அவர்கள் சொந்த மாநிலத்திற்குச் சென்றபிறகு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார். இதில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சங்கர், மண்டல துணை வட்டாட்சியர் தினேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் பொன்மலர், கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல் ராஜ், கிராம உதவியாளர்கள் சரவணன், சுரேஷ், சீனு ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் பழனி உள்பட பலர் இருந்தனர்.