செங்கல்பட்டு, ஆக. 25: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஆபத்தை உணராமல் ரயில்வே தண்டவாளத்தை மாணவர்கள் மற்றும் பயணிகள் கடந்து செல்கின்றனர். இதனை ரயில்வே போலீசார் கண்டும் காணாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னைக்கு அடுத்தடியாக பெரிய ரயில் நிலையமாக செங்கல்பட்டு ரயில் நிலையம் உள்ளது. இங்கு, எப்போதும் பயணிகள் அதிக நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மொத்தம் 8 நடைமேடை உள்ளன.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் அதிகம் இயக்கப்பட்டு வருகின்றது. அதேபோல், திருமால்பூரில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரை வரை துரித மின் தொடர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், தென் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கும், இதேப்போன்று வெளி மாநிலத்திற்கும் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நின்று செல்லும். ஆனால், ஒரு சில விரைவு ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கின்றன. இந்த ரயில்களும் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்த சூழலில் காலை மற்றும் மாலையிலும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்களும் ஆபத்தை உணராமல் தங்கள் பணிகளுக்கு விரைந்து செல்ல வேண்டும் என்பதற்காக ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். அப்போது, எதிர்பாரத விதமாக விரைவு ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலையத்தை கடந்தால் மிக பெரிய விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. எனவே, மாணவர்களும், பொதுமக்களும் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் நடை மேடையை முறையாக பயன்படுத்த வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில் ரயில்வே போலீசார் ரயில்வே தண்டவாளத்தை கடப்பவர்களை எச்சரித்து அனுப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.