செங்கல்பட்டு, ஆக. 7: செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கபட்டு நவீனமயமாக்கப்பட உள்ளன. நாடெங்கும் 508 ரயில் நிலையங்களில் சீரமைப்பு பணிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். நாடெங்கும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை உலக தரத்தில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதற்காக ‘அம்ரித் பாரத்’ ரயில் நிலையங்கள் என்ற திட்டம் உருவாக்கப்பட்டு இதன் கீழ் முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இந்த ரயில் நிலையங்கள் புதுப்பொலிவும் பெற போகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 508 ரயில் நிலையங்கள் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளன. இந்நிலையில், மேற்படி பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரே நேரத்தில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 25 ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக தமிழகத்தில் செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் உள்ளிட்ட 18 ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நேற்று காலை முதல் தொடங்கப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக பாரம்பரியமிக்க செங்கல்பட்டு ரயில் நிலையத்தை நவீன ரயில் நிலையமாக மாற்றுவதற்கு ரூ.22 கோடியே 14 லட்சம் செலவில் மேம்பாட்டு பணிக்கான திட்டத்தை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் திறந்து வைத்தார். அதிநவீன ரயில் உள்கட்ட அமைப்பு மற்றும் பயணிகள் வசதிக்காக பயணங்களின் தனித்தனியாக நுழைவு மற்றும் வெளியேறும்படி உலகம் தரம் வாய்ந்த மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவான வசதிகள் பொருத்தப்பட பல்வேறு திட்டங்களுக்காக செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் செங்கல்பட்டு நகராட்சி சேர்மன் தேன்மொழி நரேந்திரன் பாஜ மாவட்ட தலைவர் வேதாசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடக்க உள்ளது. இதற்கான விழா நேற்று கூடுவாஞ்சேரியில் நடந்தது. இதில், விழாவில், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மேலும், பாஜகவின் முன்னணி நிர்வாகிகள் ரயில்வே துறை உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.