உத்திரமேரூர்: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழுதடைந்துள்ள ஏரிகளை சீரமைக்க வேண்டும் என்று சட்டசபையில் சுந்தர் எம்எல்ஏ வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, உத்திரமேரூர் தொகுதி திமுக எம்எல்ஏ க.சுந்தர் பேசியதாவது: திராவிடல் மாடல் ஆட்சியில் நீர்வளத்துறையில் பல்வேறு திட்டங்களை புதிதாக கொண்டு வந்து நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் மிகுந்த மாவட்டங்கள் என்று சொல்வார்கள்.
அந்த மாவட்டத்தில் உள்ள ஏரிகள் பழுதடைந்துள்ளது. கால்வாய், மதகுகள் பழுதடைந்துள்ளது. எனவே, அதற்கான நிதியை ஒதுக்கி அதனை செய்ய அமைச்சர் முன்வருவாரா? என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘உறுப்பினர் சொன்னது உண்மை தான். காரணம், பல ஆண்டு காலமாக அதை செப்பனிடபடாத காரணத்தால் மதகுகள் எல்லாம் இடிந்துள்ளது. இந்தாண்டு அப்படிப்பட்ட ஏரிகளை எல்லாம் எடுப்பதற்கு கணக்கு எடுத்துள்ளோம். இந்தாண்டு அப்படிப்பட்ட ஏரிகளை எல்லாம் எடுத்து பழுதுபார்க்கப்படும்’ என்றார்.