செங்கல்பட்டு, ஆக. 5: செங்கல்பட்டு அருகே நடைபெற்ற கன்னியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம் பகுதியில் 300 ஆண்டுகளுக்கும் மேல் மிகப் பழமையான கன்னியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை குலதெய்வமாக வழிபடுபவர்கள் தமிழகம் முழுவதிலும் உள்ளனர். இந்த கோயிலில் ஆடிமாதம் முழுவதும் மிக சிறப்பாக விழாக்கள் நடைபெறும். அதிலும், குறிப்பாக ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜைகள், அலங்காரங்கள் நடைபெறும்.
அம்மன் அலங்காரத்தோடு வீதி உலா வருவது வழக்கம். இந்நிலையில், ஆடிமாத மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று, இரவு 7 மணிவரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓம்சக்தி பராசக்தி என அம்மன் மந்திரத்தை உச்சரித்தவாறு தீக்குழியில் இறங்கி தீமிதித்தினர். மேலும், இந்த கோயிலில் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற விரதமிருந்து கோயிலில் பொங்கலிட்டும், முடிகாணிக்கை செய்து படையலிட்டு வழிபட்டனர். தீமிதி திருவிழாவையொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.