செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ரூ.130 கோடி மதிப்பீட்டில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், ரூ.130 கோடி மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதனை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தானர். பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதவாது: செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, 10 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய புறநகர் பேருந்து நிலையம் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு ரூ.130 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர், இந்த பேருந்து நிலைய பணிகளை இந்த ஆண்டு 2025 இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவினை தொடர்ந்து நானும், எங்கள் துறை சார்ந்த அதிகாரிகளும் இணைந்து கள ஆய்வினை மேற்கொண்டோம். இந்த பேருந்து நிலையம் இயங்கத் தொடங்கும்போது. சுமார் 600க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் இங்கே வந்து செல்லவும் வாய்ப்பு உள்ளது.
ஒரே நேரத்தில் 57 பேருந்துகள் நிற்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள், திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனை வசதி, உணவகங்கள், தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள், இவை அனைத்தும் நவீன நாகரிக வசதிகள் மற்றும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள், விழுப்புரம், திருச்சி, பெங்களூரு, ஓசூர் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் வழித்தடங்களை பின்பற்றும். இந்த பேருந்து நிலையம் செயல்பட தொடங்கிய பின், சென்னையின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த மாவட்ட மக்களுக்கு இது ஒரு மிகப்பெரிய நன்மையாக அமையும். மாமல்லபுரம் பேருந்து நிலையம் மந்த நிலையில் பணிகள் நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல. புவியியல் அமைப்பு (ஏஎஸ்ஐ) சார்ந்த அனுமதிக்காக அத்தியாவசியமான தகவல்களை எங்கள் துறையின் செயலாளர், உறுப்பினர் செயலாளர் மூலம் ஏஎஸ்ஐ அலுவலகத்திற்கு சமர்ப்பித்து, அனுமதியும் பெற்றுள்ளோம். இதனடிப்படையில் வேலைகள் விரைவாக முன்னேற்றப்பட்டு வருகின்றன.
2026 ஜனவரி மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.தற்போது அமைக்கப்பட்டு வரும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம், செங்கல்பட்டு பேருந்து நிலையம், மாமல்லபுரம் பேருந்து நிலையம், ஆவடி புதிய பேருந்து நிலையம் இவற்றில் மலிவுவிலை உணவகங்கள் நிச்சயமாக செயல்படுத்தப்படும். இதற்காக கிளாம்பாக்கத்தில் உள்ள சுயதொழில் செய்பவர்களை அணுகி, சமைப்பதற்கான இடங்களை கேட்டு வருகின்றோம். சாத்தியமான வழிமுறைகளை ஆய்வு செய்து வருகிறோம். உங்கள் கோரிக்கையும், ஆலோசனையும் நிச்சயமாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா. சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ். முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா. சப்-கலெக்டர் மாலதி ஹெலன், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ் குமார், சிஎம்டிஏ தலைமைத் திட்ட அமைப்பாளர் ருத்ரமூர்த்தி, தலைமை பொறியாளர் மகாவிஷ்ணு, கண்காணிப்பு பொறியாளர் பாலமுருகன், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.