செங்கல்பட்டு, அக்.26: செங்கல்பட்டில் நடந்த 127ம் ஆண்டு தசராவிழா நிறைவு விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். செங்கல்பட்டு நகரில் ஆண்டு தோறும் நவராத்திரியை முன்னிட்டு தொடர்ந்து, 10 நாட்கள் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில், கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்து மிக பழைமையான பாரம்பரியம் மிக்க இந்த, தசரா விழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தோடு கலந்து கொள்வார். அதன்படி, 127வது தசரா விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நேற்று முன்தினமான 24ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடந்தது.
ஒவ்வொரு நாளும் தசரா நடைபெற்ற சின்ன கடை வீதியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கான தாலாட்டு ராட்டினம், டோரா என்கிற ராட்சத ராட்டினம் உள்ளிட்ட பலவகையான ராட்டிணங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களூக்கான சாதனங்கள் காட்சி படுத்தப்பட்டிருந்தது. மேலும், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள், முதியர்வர்கள் என பலர் இந்த விழாவில் கலந்து கொண்டு கண்டுகளித்தனர். நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினரும் இணைந்து இதற்கான பாதுகாப்பு பணிகளை செய்திருந்தனர்.
நவராத்திரியையொட்டி, கடந்த 9 நாட்களும் செங்கல்பட்டு பகுதியில் உள்ள முக்கிய அம்மன் கோயில்களில் வித விதமான அம்மன் அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பட்டது. தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் 9வது நாள் இரவில் சின்ன கடை வீதியில் செங்கல்பட்டில் உள்ள முக்கிய கோயில்களின் தேர் ஒன்றாக அணிவகுத்து அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், வன்னி மரத்தில் அம்பு எய்தும் நிகழ்வும் நடைபெற்றது. துர்கை வேடமிட்டு வதம் செய்யும் நிகழ்ச்சியை காண, செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.