செங்கல்பட்டு, ஆக. 3: செங்கல்பட்டில் காலாவதியான மதுபானம் கொடுத்ததாக டாஸ்மாக் கடை ஊழியரிடம் மதுபிரியர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அரசு டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று மது டாஸ்மாக் கடைக்கு வந்தார். ₹180 கொடுத்து ரம் வகை மதுபாட்டிலை வாங்கி கொண்டு அருகே உள்ள பாருக்குச் சென்றார். பாதி அளவு மது குடித்த நிலையில், திடீரென்று அந்த நபருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நபர் தள்ளாடியபடி சென்று டாஸ்மாக் கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, தனக்கு காலாவதியான மதுபாட்டிலை விற்பனை செய்ததாகவும், அதனால் தனக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறி கடை ஊழியரிடம் தகராறில் செய்தார்.
இதனால் குழப்பம் அடைந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள், அரசு குடோனில் இருந்து அனுப்பப்படும் மதுபான பாட்டில்களை விற்பனை செய்வதாகவும், மதுபானத்திற்கு காலாவதி தேதி இல்லை என்றும், பீர் வகைகளுக்கு மட்டும் காலாவதி தேதி உள்ளதாக தெரிவித்தனர். அதனை ஏற்க மறுத்த மதுபிரியர் டாஸ்மாக் கடை ஊழியரிடம் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தைக் கண்ட சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.