செங்கம், செப்.4: திருப்பத்தூரில் இருந்து திருச்சி சென்றபோது செங்கம் அருகே நள்ளிரவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் தலைமறைவாக உள்ள லாரி டிரைவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், காக்காம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி மகன் யோகேஷ்(25), தனசேகர் மகன் ஆகாஷ்(20), ராஜா மகன் கவுதம மணிகண்டன்(28). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இந்நிலையில் யோகேஷின் உறவினர்கள் திருச்சியில் வசித்து வருகின்றனர். அவர்களை பார்ப்பதற்காக தனது நண்பர்களான ஆகாஷ் மற்றும் கவுதம மணிகண்டனுடன் யோகேஷ் காரில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள புதுச்சேரி-பெங்களூரு புறவழிச்சாலை வழியாக நள்ளிரவு 12 மணியளவில் இவர்களது கார் சென்று கொண்டிருந்தது. அப்போது லேசான மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் எதிரே திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற லாரி, எதிர்பாராத விதமாக மோதி கார் அப்பளம் போல நொறுங்கியது. மேலும் லாரியின் முன்பகுதியும் சேதமானது. இந்த விபத்தில் யோகேஷ் உள்பட 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே யோகேஷ், ஆகாஷ், கவுதம மணிகண்டன் ஆகிய 3 வாலிபர்களும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விபத்து நடந்த பகுதி பிரதான தேசிய நெடுஞ்சாலை என்பதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த செங்கம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் செங்கம் அரசு மருத்துவமனையில் இருந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விபத்து நடந்ததும் தப்பி ஓடிவிட்ட லாரி டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த கோர விபத்தில் 3 வாலிபர்கள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.