செங்கம், ஆக.10: செங்கம் அருகே நள்ளிரவில் கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அன்வராபாத் கிருஷ்ணா நகரில் அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் பூசாரி கோயிலை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம ஆசாமி அம்மன் சன்னதி கேட்டில் கட்டி வைத்திருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடினார்.
பின்னர், கோயில் முன் இருந்த உண்டியலை உடைத்து திருட முயன்றார். அப்போது, சத்தம் கேட்டு விரைந்து வந்த அப்பகுதி மக்கள் மர்ம ஆசாமியை மடக்கி பிடித்து, திருடிய காணிக்கை பணத்தை மீட்டனர். பின்னர், புதுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், போளூர் அடுத்த அத்திமூர் கிராமத்தை சேர்ந்த குமார்(49) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், வழக்கு பதிந்து குமாரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.