நன்றி குங்குமம் டாக்டர் சென்னை வடபழனியில் உள்ள ‘நாஞ்சில் உதயம் செக்கு எண்ணெய் விற்பனை அங்காடி’யில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவை செக்கில் தயார் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.செக்கு எண்ணெய் பயன்பாட்டின் அவசியம் பற்றி அவர்களிடம் பேசினோம்…‘‘மக்கள் அன்றாட பயன்பாட்டுக்கு வாங்கும் சமையல் எண்ணெய்களில் கலப்படம் அதிகரித்து வருகிறது. இதனால் புற்றுநோய், பக்கவாத நோய்கள், கல்லீரல் பாதிப்பு, ஒவ்வாமை மற்றும் மாரடைப்பு போன்றவை ஏற்படும் அபாயம் அதிகமாகிவிட்டது. இந்த கலப்படத்திலிருந்து தப்பித்து ஆரோக்கியமாய் வாழ, பழங்கால முறைப்படி செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்களே உதவும்.வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய காந்தி எண்ணெய், பாமாயில் போன்றவற்றில் ரப்பர் ஆயில், குரூட் ஆயில் போன்ற இதர எண்ணெய்களின் கலப்படம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. ஆனால், மரச்செக்கில் இயற்கையாக தயாரிக்கப்படும் எண்ணெயில் இந்த அபாயங்கள் இல்லை. எண்ணெய் வித்துகளில் இயற்கையாகவே கிடைக்கும் சில நன்மைகள் அழியாமலும் காக்கப்படுகின்றன.செக்கு எண்ணெய் பார்ப்பதற்கு அடர் நிறத்தில் கசடுகளோடு இருப்பதால், பலருக்கு பிடிப்பதில்லை. கவர்ச்சியான பேக்கிங்கில், பார்ப்பதற்கு கண்ணாடி போன்று இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயினையே ஆபத்து உணராமல் வாங்கி பயன்படுத்துகின்றனர்’’ என்கிறார்கள்.நல்ல உணவகங்களை தேர்ந்தெடுப்பது எப்படி?!வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், இன்றைய அவசர வாழ்க்கையில் ஓட்டல்களைத் தவிர்ப்பது சாத்தியமில்லாமல் இருக்கிறது. இதற்கு என்ன செய்வது?வழி சொல்கிறார்கள் சென்னையில் செயல்பட்டு வரும் கிருஷ்ண விலாசம் ஓட்டல் நிர்வாகத்தினர்.‘‘ஒரு நல்ல ஓட்டல் உணவு என்பது அதிக வண்ணங்களோடோ, கவர்ச்சிகரமாகவோ இருக்கக் கூடாது. செயற்கை நிறமிகள் சேர்த்தால்தான் அப்படி அதிக நிறம் உணவுக்குக் கிடைக்கும். அதேபோல், சுவைக்காக அதிக ரசாயன உப்பு பயன்படுத்துகிறார்கள்.முக்கியமாக கெட்ட கொழுப்பை உண்டாக்கும் டால்டா, சூடாக்கப்பட்ட எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு. இதேபோல் சுகாதாரக் குறைவால் தயாராகும் உணவால் மஞ்சள் காமாலை, டைஃபாய்டு போன்ற பல நோய்கள் வரக்கூடும்.எனவே, தவிர்க்க முடியாமல் ஓட்டலில் சாப்பிட நேர்ந்தால் தரமான உணவகங்களிலேயே சாப்பிட வேண்டும். ஆரோக்கியத்துக்காக கொஞ்சம் மெனக்கெடுவதோ, செலவு செய்வதிலோ தவறு இல்லை. சூடான உணவுகளை சாப்பிடுவது ஓரளவு பாதுகாப்பானது. குளிர்ச்சியான, ஆறிப்போன உணவுகளில் நிறைய நுண்ணுயிரிகள் இருக்கலாம். வெளிநாட்டு உணவுகள், அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது’’ என்கிறார்கள்.– ஜி.ஸ்ரீவித்யா
செக்கு எண்ணெய்க்கு மாறுவோம்
previous post