சூலூர், அக்.20: சூலூர் அருகே உள்ள பட்டணம் கிராமத்தில் விஐபி நகர் எனும் வீட்டுமனை பிரிவு உள்ளது. இந்த பகுதிக்கு செல்லும் சாலையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து வழிவிட மறுப்பதாக கூறி கடந்த 5 பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றத்தில் மேற்படி தனியாரிடமிருந்து வழித்தடத்தை மீட்டு ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த உத்தரவு வந்து மூன்று மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திடீரென சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை தொடங்கிய உள்ளிருப்பு போராட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்தது.
சூலூர் வட்டாட்சியர் நித்திலவள்ளி பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் ஏற்க மறுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தினர். தகவலறிந்த சூலூர் போலீசார் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். பொதுமக்களின் திடீர் போராட்டத்தால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.