சூலூர், ஜூன் 18: சூலூர் அருகே உள்ள மயிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர், நேற்று மாலை தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு தனியாக வீட்டிற்கு நடந்து வந்தார். சின்னியம்பாளையம்-மயிலம்பட்டி சாலையில் வந்தபோது பேருந்து நிறுத்தத்தில் இருந்து வாலிபர் ஒருவர், இளம் பெண்ணை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தாக தெரிகிறது. இதனால், அச்சமடைந்த இளம்பெண், அந்த வாலிபர் தன்னை கடந்து செல்லட்டும் என சாலை ஓரமாக ஒதுங்கி நின்றுள்ளார். அப்போது, அங்கு வந்த அந்த வாலிபர், திடீரென இளம் பெண்ணை கையை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்ததாக தெரிகிறது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இளம் பெண் லேசாக காயமடைந்தார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து விசாரித்தபோது வாலிபர் அத்துமீறி நடந்து கொண்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு தர்மஅடி கொடுத்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் பஸ்வான் (40) என்பதும், தற்போது மயிலம்பட்டியில் தங்கி கட்டிட வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.