சூலூர்,நவ.4: கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மேற்கு தொடர்ச்சி மலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நொய்யல், கௌசிகா நதிகளை பாதுகாக்க வேண்டும். வன விலங்குகளிடமிருந்து விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும். பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
தேங்காய் கொப்பரை ரூ.150க்கும், பால் லிட்டர் ரூ.45க்கும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், பயிர் கடன்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் கடனுதவி மானிய விலையில் கருவிகள், உரம், மருந்து, விதைகள் அனைத்து சிறுகுறு விவசாயிகளுக்கும் கிடைக்க செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் ஹன்னன்முல்லா,தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம்,மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன்,மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ரவீந்திரன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.