சூறைஆவடி, ஜூன் 11: ஆவடியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் முடிந்து 2 வாரங்களான நிலையில், கோடை வெயிலின் தாக்கம் குறையவில்லை. பகலில் சுட்டெரிக்கும் வெயிலுடன் அனல் காற்று வீசுகிறது. பகல்நேர வெயிலின் தாக்கம் நள்ளிரவு வரை நீடிக்கிறது. வெப்பம் காரணமாக பொதுமக்கள் தூக்கமின்றி பரிதவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் திடீரென்று வானில் கருமேகக் கூட்டம் திரண்டு மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது. பின்னர் மிதமான குளிர் காற்று வீசிய நிலையில், காற்றுவீச்சின் வேகம் அதிகரித்து சூறைக்காற்றாக மாறியது.
மேலும், இடி மின்னலுடன் கனமழை பெய்தது. ஆவடி, திருவேற்காடு, திருநின்றவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. முக்கியச் சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிக்குச் சென்று திரும்பிய மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி வீட்டிற்குச் சென்றனர். மழையை சற்றும் எதிர்பார்த்திராத பொதுமக்கள் நனைந்தபடி இருசக்கர வாகனங்களில் சென்றனர். கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர் வானிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
*புழல்பகுதியிலும் நேற்று கனமழை பெய்தது. புழல் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, செங்குன்றம் செம்பியம் மாநில நெடுஞ்சாலை சந்திக்கும் சிக்னல், புழல் அண்ணா நினைவு நகர் பகுதியில் சாலையின் 2 பக்கங்களிலும் மழைநீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது. மேலும் புழல் அடுத்த கதிர்வேடு மேம்பால சுரங்கப்பாதை மற்றும் மூர்த்தி நகர், விநாயகபுரம் ஆகிய பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
நேற்று பெய்த அரை மணி நேர மழைக்கே மேற்கண்ட சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளித்ததால், வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகினர். எனவே, சம்பந்தப்பட்ட மாநில நெடுஞ்சாலைத்துறையினர், உரிய நடவடிக்கை எடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன், மேற்கண்ட சாலைகளில் மழைநீர் கால்வாய்கள் அமைத்து, சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.