மஞ்சூர், ஜூன் 26: மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது.
மழையுடன் சூறாவளி காற்றும் வீசியதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்த கன மழையால் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தும் மண் சரிவுகள் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் சூறாவளி காற்று மட்டும் தொடர்ந்து வீசியது.
இந்நிலையில் கடந்த 2 தினங்களாக காற்றுடன் மீண்டும் சாரல் மழை பெய்ய துவங்கியுள்ளது. இரவு பகலாக இடைவிடாமல் தொடர்ந்து சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் இடையே இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி குந்தாவில் 20 மி.மீ மழை பெய்துள்ளனது. தொட்டக்கம்பை, பிக்கட்டி, எடக்காடு, எமரால்டு பகுதிகளில் சாரல் மழையுடன் சூறாவளி காற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பெரும்பாலான தொழிலாளர்கள் தேயிலை தோட்டம் மற்றும் கூலி வேலைகளுக்கு செல்ல முடியாமல் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.