ஜெயங்கொண்டம், மே 30: தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை எனும் திட்டம் தமிழக முதல்வரால் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் தலா இரண்டு வருவாய் கிராமங்களில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களால் இம்முகாம் நடத்தப்படவேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் சூரியமணல் கிராமத்தில் இத்திட்டம் வேளாண்மைத்துறை அலுவலர்களால் நடத்தப்பட்டது.
முகாமில் வேளாண்மை உதவி இயக்குநர் மகேந்திரவர்மன் கலந்து கொண்டு உழவரைத் தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட செயல்பாடுகள், கோடை உழவு மானிய விபரங்கள், டெல்டா பகுதி விவசாயிகளுக்கான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம், மண் ஆய்வு செய்து உரமிடுவதன் அவசியம், பிரதம மந்திரி கவுரவ நிதி உதவித் திட்டம் ஆகியவை குறித்து விளக்கினார்.
விதைச் சான்றளிப்புத் துறை சார்பில் விதை ஆய்வாளர் சேகர் கலந்து கொண்டு விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்து சான்று பெறும் விதிமுறைகள் குறித்து விளக்கினார். திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மைய மூத்த வேளாண் அலுவலர் முருகன் கலந்து கொண்டு பயிர்களுக்கேற்ற திரவ உயிர் உரங்களின் வகைகள், அவற்றை பயன்படுத்தும் விதம், மண்ணில் நுண்ணுயிரிகள் பெருகி செயல்படுவதன் மூலம் ஏற்படும் மண்வள மேம்பாடு ஆகியவை குறித்தும் விளக்கினார்.
அரியலூர் மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் ஆதிகேசவன் கலந்து கொண்டு மண் ஆய்வு செய்ய மண் மாதிரி எடுக்கும் முறையை செயல் விளக்கம் செய்து காட்டி மண் வள அட்டையிலுள்ள உரப் பரிந்துரைப்படி உரமிடுவதால் உரச்செலவு குறைவதுடன் மண் வளத்தையும் பாதுகாக்கலாம் என எடுத்துரைத்தார். கூட்டுறவுத்துறை சார்பில் கூட்டுறவு சங்கங்களின் கள அலுவலர் கலையரசன் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் குறித்தும், வட்டியில்லா கடன் குறித்தும் விளக்கி விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பாரம்பரியநெல் ரகங்கள், சாகுபடிமுறை மற்றும் பாரம்பரிய அரிசி உண்பதால் கட்டுப்படுத்தப்படும் நோய்கள் மற்றும் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயி சுந்தரேசன் விளக்கினார்.
இதே போன்று இடையார் கிராமத்தில் தோட்டக்கலைத்துறை அலுவலர்களால் முகாம் நடத்தப்பட்டது. இம்முகாம்களில் திரவ உயிர் உர உற்பத்தி மைய வேளாண் அலுவலர் செல்வகுமார், விதைச்சான்று அலுவலர் ராமலிங்கம் ஜெயங்கொண்டம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் கண்ணன், உதவி வேளாண் அலுவலர்கள் கனகராஜ், ராம்குமார், பாலாஜி, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சாந்தி, மகேஸ்வரி, அட்மா திட்ட அலுவலர்கள் மீனாட்சி, ஆரோக்கியராஜ், மகேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.