நன்றி குங்குமம் டாக்டர் என்ன மந்திரமோ, மாயமோ என்று குழம்பும் அளவுக்கு ஃபிட்னஸ் உலகில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது ‘ஹிட் ஒர்க் அவுட்’ என்கிற High-Intensity Interval Training. எளிதானது, இளமையைக் காக்கும் உடற்பயிற்சி என்றும் வர்ணிக்கப்படுவதால் பலரும் ஹிட் ஒர்க் அவுட்டை நாடுவது அதிகமாகி வருகிறது. அப்படி என்னதான் ஸ்பெஷல்… ஹிட் ஒர்க் அவுட் என்பது என்ன?!High-Intensity Interval Training என்பதை தமிழில் தீவிர இடைவெளிப்பயிற்சி என்றும் குறிப்பிடலாம். சுருக்கமாகவோ, செல்லமாகவோ இதனை HIIT என்று குறிப்பிடுகிறார்கள் ஃபிட்னஸ் காதலர்கள். வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங், சைக்கிளிங் என எந்தவிதமான உடற்பயிற்சியிலும் தீவிர இடைவெளிப்பயிற்சியை செய்யலாம் என்பதே இதன் மிகப்பெரிய சிறப்பு. இதற்கு எந்த ஒரு உபகரணமோ, பயிற்சியாளரோ அல்லது ஜிம்முக்குச் சென்று செய்யவோ தேவையில்லை. உதாரணத்துக்கு வாக்கிங் செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் சாதாரண வேகத்தில் நடையைத் தொடங்கி, அடுத்து அதிவேகமாக நடக்க வேண்டும். பின்னர் மெதுவாக வேகத்தை குறைக்க வேண்டும் அல்லது முற்றிலுமாக நடையை நிறுத்த வேண்டும். பிறகு மீண்டும் வேகத்தை அதிகரித்து நடக்க வேண்டும். இதே பாணியில் ஜாக்கிங், ரன்னிங், சைக்கிளிங், ஜம்பிங் என எல்லாவற்றிலும் ஹிட் ஒர்க் அவுட்டை செய்யலாம். ஹிட் ஒர்க் அவுட்டின் நடுவில் எங்கேயும் நிறுத்தாமல் செய்யும்போது, வழக்கமான ஒர்க் அவுட்டின் பாதிக்கும் குறைவான நேரத்திலேயே இதைச் செய்ய முடிவதோடு, அதிகளவு கலோரிகளையும் எரிக்கலாம். உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் விரைவாகவும் எடை இழக்கலாம். 20 நிமிடங்கள் செய்தாலே தசை வலிமையைப் பெறலாம். அதிகபட்ச பயன்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் இந்த ஒர்க் அவுட்டை செய்தாலே போதுமானது என்கிறார்கள் நிபுணர்கள்.சூப்பர் பவரான ஹிட் ஒர்க் அவுட்டை உங்களின் கடுமையான வேலை நேரங்களுக்கு நடுவிலும், மதிய சாப்பாட்டு இடைவெளி அல்லது தேநீர் நேரத்திலும் செய்ய முடியும். ட்ரெட் மில்லில் ஓடும் ஒருவரைவிட வெறும் 15 நிமிட ஹிட் பயிற்சியில் அதிவேகமான முன்னேற்றத்தையும் அடைய முடியும். பயிற்சி நேரத்துக்குப் பிறகும் கூட நாள்முழுவதும் உடலின் கொழுப்பு மற்றும் கலோரிகள் எரிக்கப்படுவதாகவும் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.2006-ம் ஆண்டின் ஒரு ஆய்வில், 8 வாரங்கள் தொடர்ந்து ஹிட் ஒர்க் அவுட்டை செய்தபின், ஆய்வுக்கு முன் எந்த வேகத்தில் ஒருவர் மிதிவண்டியில் சென்றாரோ அதைவிட, இரு மடங்கு வேகத்தில் செல்ல முடியும் எனவும் அதன்பின்னர் தொடர்ந்து அதே வேகத்தை பராமரிக்கவும் முடிவதாக கண்டறியப்பட்டுள்ளது.ஓடுதல், பைக்கிங், ஸ்கிப்பிங் மற்றும் கயிறு இழுத்தல் என அனைத்துவிதமான பயிற்சிகளும் ஹிட் மூலம் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. இவை எல்லாமே உங்கள் இதயத் துடிப்பை வேகமாகப் பெற நன்றாக வேலை செய்கின்றன. அதிகளவில் கொழுப்பு எரிப்பு மற்றும் அதிக தசைகள் பாதுகாக்கப்படுவதோடு கூடுதலாக, இந்த ஒர்க் அவுட்டை முடித்த 24 மணி நேரத்தில், உங்கள் மனித வளர்ச்சி ஹார்மோன்(Human Growth Hormone) உற்பத்தியை 450 சதவீதம் வரை ஹிட் தூண்டுகிறது. மனித வளர்ச்சி ஹார்மோன் அதிக கலோரி எரிக்கப்படுவதற்கு மட்டுமல்லாமல், வயதான செயல்முறையை மெதுவாக்கவும் உதவுகிறது. இதனால்தான் உள்ளேயும் வெளியேயும் உங்களை இளமையாக்குகிறது ஹிட் ஒர்க் அவுட்! தொகுப்பு: இந்துமதி