மதுரை, ஆக. 30: சூட்கேசில் கஞ்சா கடத்தியவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர் அருகேயுள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்தவர் சிவசாமி (52). கடந்த 25.10.2009ல் மதுரை மாவட்டம் திருமங்கலம் சின்னமாரி தெருவில் சூட்கேசுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றுள்ளார். சந்தேகம் அடைந்த திருமங்கலம் டவுன் போலீசார் சூட்கேசை சோதனையிட்டனர். அதில் 15 கிலோ கஞ்சா இருந்துள்ளது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் கே.விஜயபாண்டியன் ஆஜரானார். இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அதில், சிவசாமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.