திருக்கோவிலூர், ஆக. 13: நள்ளிரவில் பெய்த கனமழையால்சுவர் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி உடல் நசுங்கி பலியானார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ஆதிதிருவரங்கம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(65), கூலி தொழிலாளி. இவருக்கு லட்சுமி (55) என்ற மனைவியும், 2 மகன்களும், அலமேலு என்ற மகளும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி விட்டது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கட்டிக் கொடுத்த கல் வீட்டில் இவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். பின்னர் அந்த வீட்டை சேர்த்து மற்றொரு வீட்டை கட்டி பின்புறம் உள்ள வீட்டில் மகன்கள் குடும்பத்துடன் குடியிருந்து வந்துள்ளனர். மகள் பக்கத்து தெருவில் கணவருடன் வசித்து வருகிறார். முன்புற வீட்டில் மாரிமுத்து, மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் மாரிமுத்து விவசாய வேலைக்கு சென்று விட்டு, இரவு வீட்டில் தூங்கியுள்ளார். இவரது மனைவி லட்சுமி மகள் அலமேலு வீட்டுக்கு சென்று இரவில் அங்கேயே தங்கி விட்டார். கடந்த 2 நாட்களாக திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாரிமுத்துவின் வீட்டுச்சுவர் நனைந்து பலமிழந்து காணப்பட்டதாக தெரிகிறது. இதனால் இரவு 11 மணியளவில் பலத்த மழை பெய்து கொண்டிருந்த நிலையில், அவரது வீட்டுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட மாரிமுத்து அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு பின்வீட்டில் இருந்த மகன்கள், அவரின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாரிமுத்துவின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.