மூணாறு, மார்ச் 8: மூணாறில் சுற்றுலா பயணிகளை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கேரளா மாநிலத்தில் பிரபல சுற்றுலாத்தலமான மூணாறுக்கு நேற்று முன் தினம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் மூணாறு சுற்றிவிட்டு நேற்று இரவு பழைய மூணாறு அருகே உள்ள சாலையோர கடைக்கு சாப்பிட சென்றுள்ளனர். அங்கு உணவு சரியில்லை என்று கூறி கடை உரிமையாளர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அப்போது நடந்த தாக்குதலில் ஆலப்புழையில் இருந்து வந்த சுற்றுலா பயணி சியாம் நாத் (33) காயமடைந்துள்ளார். ஆனால் வாக்குவாதத்திற்கு இடையே பயணிகள்தான் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று கடை உரிமையாளர் தெரிவித்தார். இது சம்பந்தமாக இரு தரப்பினரும் மூணாறு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.