ஊட்டி, ஜூன் 30: நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை சுற்றுலா தலங்களான சூட்டிங்மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைன் பாரஸ்ட், கேர்ன்ஹில், அவலாஞ்சி உள்ளிட்டவை ஆகும். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நகரில் உள்ள பூங்காக்கள், படகு இல்லங்கள் மட்டுமின்றி நகருக்கு வெளியில் அமைந்துள்ள இதுபோன்ற சுற்றுலா தலங்களை காண ஆர்வம் காட்டுவார்கள். கோடை சீசன் நிறைவடைந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் வார நாட்களில் வர கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்தது.
தற்போது வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடகாவில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், வார விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கணிசமான அளவு வந்த நிலையில் தொட்டபெட்டா சிகரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
அதற்கேற்ப ஊட்டியில் வெயிலுடன் இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் அதனை அனுபவித்த படியே சுற்றி பார்த்தனர். இதேபோல் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களான ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.