ராமேஸ்வரம், ஜூன் 3: ராமேஸ்வரத்தில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் ஒரு மணி நேர தொடர் சிலம்பாட்டத்தில் பங்கேற்றனர். ராமேஸ்வரம் சம்பை கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாரம்பரிய தற்காப்பு கலைகள் மற்றும் விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி சிலம்பம் மற்றும் தற்காப்பு மாஸ்டர் ஆறுமுகம் இளம் தலைமுறையினருக்கு இதுபோன்ற தற்காப்பு கலை பயிற்சிகளை அளித்து வருகிறார்.
இங்கு 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நாட்டின் தென் எல்லையான அரிச்சல் முனையில், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி தொடர் சிலம்பாட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீவு முழுவதும் இருந்து 140 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தொடர்ந்து ஒரு மணிநேரம் சிலம்பம் சுழற்றினர்.
தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்து உறுதிமொழி ஏற்று, அங்கு கூடியிருந்த சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிலம்பத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சமூக சேவகி சாரதா பரிசு வழங்கினார். ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ நடராஜன் நன்றி தெரிவித்தார்.