போளூர், ஆக.23: ஜவ்வாதுமலையில் கோடை விழாவை முன்னிட்டு பூங்கா, கோலப்பன் ஏரி, பீமன் நீர் வீழ்ச்சி பகுதிகளில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி ஜவ்வாதுமலையில் வரும் 30, 31ம் தேதிகளில் கோடை விழா நடைபெற உள்ளது. இந்த கோடை விழாவை காண திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், மாவட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள், மாணவர்கள் என சுமார் 2 லட்சம் பேர் வந்து செல்வார்கள். இந்த கோடை விழாவில் பொழுது போக்கு அம்சங்கள், அரசின் திட்டங்கள், அரசு செய்த சாதனைகள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும். இதில் பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ச்சியுடன் செல்வது வழக்கம்.
இவ்விழா நடைபெறும் நிலையில் ஜமுனாமரத்தூர் பகுதியில் உள்ள கோலப்பன் ஏரியில் மக்கள் படகு சவாரி செய்வார்கள். சுற்று சூழல் பூங்காவை பார்வையிட்டு செல்வார்கள், பீமன் நீர் வீழ்ச்சியில் குளித்து விட்டு மகிழ்ச்சியுடன் செல்வார்கள். இந்த இடங்களை ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் உதவி பொறியாளர் த.தமிழ்செல்வன் தலைமையில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஒன்றிய குழு தலைவர் எம்.ஜீவாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் த.செந்தில்குமார் ஆய்வு செய்து வருகின்றனர்.