காஞ்சிபுரம்,பிப்.28: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையும், வேலூர் தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது இடங்கள் மற்றும் பள்ளி மாணவ – மாணவிகள் மத்தியில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தகவல்கள், வாகன பிரசார கலைக்குழு மூலம் கலை நிகழ்ச்சிகள் 2 நாட்கள் நடைபெற்றது.
இதில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் வாயிலாக திடக்கழிவு மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நீர் பாதுகாப்பு தவிர்த்தல், பிளாஸ்டிக் பை தவிர்த்தல், இயற்கை வளம் காத்தல் முதலிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்துக்களை, பொதுமக்கள் மற்றும் மாணவ – மாணவிகளிடையே எடுத்துரைக்கப்பட்டது. மேலும் சில்வர் டம்ளர், கண்ணாடி பாத்திரங்கள், மண்பாத்திரங்கள், வாழை இலை, துணி பைகள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அவற்றை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் இப்பிரசார வாகனம் மூலம் பிரசாரம் செய்யப்பட்டது.
இப்பிரசார வாகனம் உத்திரமேரூர் தொடங்கி திருப்புலிவனம், மருதம், மாகரல், களக்காட்டூர், குருவிமலை, சந்தவேலூர் மாம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை பள்ளிகளுகளில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எழில், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் துர்கா, மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்துகுமரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.