*பொதுமக்கள், சிவனடியார்கள் மீட்டு சிறப்பு வழிபாடுசுரண்டை : சுரண்டை அருகே துவரங்காடு மாறாந்தை அணையில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய சிவன் மற்றும் நந்தி சிலை கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்கள், சிவனடியார்கள் சிலையை மீட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே துவரங்காடு மாறாந்தை அணை பகுதியில் 200 ஆண்டுகளுக்கு முன்பு சிவன் கோயில் இருந்ததாக கூறப்படுகிறது. காலப்போக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிவன் கோயில் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது இக்கோயிலில் இருந்ததற்கான தடயமே இல்லாத சூழல்தான் உள்ளது. இந்நிலையில் அணை பகுதியில் சிவன், நந்தி சிலை புதைந்து கிடப்பதாக தகவல் பரவியது. அப்பகுதியை சேர்ந்த சிவனடியார்கள், நந்தி மற்றும் சிவலிங்கம் சிலையை மீட்டு பூஜையில் ஈடுபட்டனர். அங்கு வந்த துவரங்காடு பொதுமக்கள் சிலர், சிவலிங்க சிலைகளை திருச்சிற்றம்பலம் சிவன் கோயிலில் வைத்து வழிபட ஏற்பாடு செய்ய வேண்டுமென தெரிவித்தனர்.இந்நிலையில் துவரங்காட்டை சேர்ந்த சிவனடியார்கள் சிலர், சிவன், நந்தி சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் அருகே வழிபாடு நடத்த வேண்டும் என்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த விஏஓ வெள்ளைப்பாண்டி மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிவலிங்கம் மற்றும் நந்தி சிலைகளை அதே இடத்தில் வைத்து வழிபாடு நடத்த அறிவுறுத்தியதன் பேரில் சிவனடியார்கள் அந்த சிலைகளை விட்டு சென்றனர். தொடர்ந்து துவரங்காடு பகுதி பொதுமக்கள் சிவன், நந்தி சிலையில் வழிபாடு செய்தனர். …