திருச்சி, ஆக.28: திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வாதுரை கூட்டம் நேற்று நடந்தது. பாலியல் தொழிலாளர்களுக்குரிய சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான இந்த கூட்டத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான மணிமொழி, மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் (பொ) மீனாசந்திரா, போலீஸ் எஸ்பி வருண்குமார் மற்றும் சியாப் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அதனை காக்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். மாவட்ட சட்ட சேவை ஆணைய வக்கீல்கள், போலீஸ் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனா். பாலியல் தொழிலாளர்களும் தங்கள் கருத்துக்களை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டனர். இக்கூட்டத்தை சங்க் ராம் சன்ஸ்த்தா மற்றும் சியாப் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தின.
கூட்டத்தில் வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட் உத்தரவுகள் குறித்தும், சட்டத்தின் அடிப்படையில் எதற்கெல்லாம் இலவச சட்ட ஆலோசனைகளுக்கு அணுகலாம் என்பது குறித்தும் விளக்கினர். மேலும் சங்க் ராம் சன்ஸ்த்தா மற்றும் சியாப் ஆகிய தொண்டு நிறுவனங்கள் இதுபோன்ற மாவட்ட அளவிலான வாதுரை கூட்டங்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்த விழிப்புணர்வு கூட்டங்களை திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.