குன்றத்தூர், அக்.5: குன்றத்தூர் அடுத்த கோவூர் சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. நவக்கிரக பரிகார தலங்களில் இக்கோயில் புதன் தலமாக கருதப்படுகிறது. இக்கோயிலுக்கு சொந்தமாக அப்பகுதியில் ஏராளமான நிலங்கள் உள்ளன. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பல ஏக்கர் நிலங்கள் சொசைட்டி மூலம் பலருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து அந்த நிலங்கள் அனைத்தும் மீண்டும் கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட கோயிலுக்கு சொந்தமான பரணிபுத்தூர் மற்றும் கோவூர் பகுதியில் உள்ள சுமார் 68 ஏக்கர் நிலங்கள் அனைத்தும் பகுதி வாரியாக பிரித்து ஏலம் விடும் பணி நேற்று கோயில் வளாகத்தில் செயல் அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
இதில், கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், பரம்பரை அறங்காவலர் அனந்தபத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோயில் நிலங்களை ஏலம் எடுப்பதற்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். சுமார் 68 ஏக்கர் நிலம் ₹12 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. நிலத்தை ஏலம் எடுத்த நபர்கள் அந்த நிலத்தில் விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் எதுவும் கட்டி வாடகைக்கு விடக்கூடாது என்றும், அவ்வாறு விதிமுறைகளை மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கோயில் நிலம் ஏலம் விடப்பட்டதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், கோயிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் மீண்டும் அடுத்த மாதம் ஏலம் விடப்படும் என்று கோயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.