கோவை, மே 15: கோவை சுந்தராபுரம் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த வாலிபர்கள் நகை பறித்து தப்பி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கணேசபுரம் ருக்மணி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பிரேமா (50). டெயிலராக பணிபுரிந்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். சுந்தராபுரம் அருகே வந்து கொண்டு இருந்தபோது அவரது பின்னால் பைக்கில் 2 வாலிபர்கள் வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் பிரேமாவின் அருகில் வந்து திடீரென பைக்கில் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர் பிரேமாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் 5 கிராம் தங்க செயினை பறித்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர்கள் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இது குறித்து பிரேமா சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து போலீசார் நகையை பறித்து சென்ற திருடர்களை தேடி வருகின்றனர்.