ஆவடி: அரசு உயர்நிலைப்பள்ளியில் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதானதால் பள்ளி மாணவர்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர். ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சுமார் 509 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, தலைமை ஆசிரியர் உட்பட 18 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆட்சியில் இந்த பள்ளி மாணவர்களுக்காக தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க இயந்திரம் வழங்கப்பட்டது. சில மாதங்களிலேயே இந்த இயந்திரம் பழுதடைந்தது. எனவே, மாணவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
ஆனால், இதுவரை பிரச்னைக்கு தீர்வு காணாமல் பள்ளி நிர்வாகம் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் தண்ணீர் குடிக்க முடியாமல் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புவது படித்து வர என நினைத்து கொண்டிருக்கிறாம். ஆனால், பள்ளிக்கு வந்தவுடன் காலையில் காலிக்கேன் எடுத்து கொண்டு ஒவ்வொரு வகுப்பை சேர்ந்த மாணவர் அரை கிலோமீட்டர் தூரம் சென்று சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ரூ.10 கொடுத்து சைக்கிளில் வைத்து பள்ளி வளாகத்திற்கு எடுத்து வருவது வழக்கமாக உள்ளது என கூறுகின்றனர்.