சிவகங்கை: தமிழக அரசு சார்பில் கடந்த 10.04.2023அன்று மானிய கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்களான வீரத்தாய் குயிலி, வாளுக்குவேலி அம்பலம் ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உருவச்சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 24.06.2024 அன்று நடைபெற்ற மானிய கோரிக்கையின் போது சிவகங்கையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மருதுபாண்டியர்களுக்கு உருவச்சிலை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
இப்பணிகள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை மண்டல இணை இயக்குநர் பாஸ்கரன் நகரம்பட்டி, சூரக்குளம் பகுதியில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் மேம்படுத்த வேண்டிய வசதிகள் மற்றும் பார்வையாளர்களின் வருகை பதிவேடு ஆகியன குறித்தும் ஆய்வு செய்தார். குயிலி, வாளுக்குவேலி அம்பலம் உருவச்சிலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும், மருதுபாண்டியர்களுக்கு உருவச்சிலை அமைப்பதற்கான இடத்தை விரைந்து தேர்வு செய்யவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.