வேலூர், ஆக.10: சுதந்திர தினத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் அந்தந்த பள்ளி மேலாண்மைக்குழுக்கள் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து வகை பள்ளிகளிலும் அமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. இக்கூட்டம் பள்ளிக்கு தேவையான வளர்ச்சியையும், குழந்தைகளின் கல்வி வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றுகிறது. இதன் மூலம் பள்ளியின் வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது. அதேபோல் பள்ளி குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை உறுதி செய்ய கிராம கல்விக்குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பள்ளி வளர்ச்சிக்கான தீர்மானங்களை நிறைவேற்றி கல்வியில் கிராம ஊராட்சிகளின் பங்களிப்பை உறுதி செய்ய முடியும். எனவே, கிராம சபை கூட்டங்களில் பள்ளி வளர்ச்சி, கற்றல், கற்பித்தல், பள்ளி இடைநிற்றல், உட்கட்டமைப்பு, மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் உயர்கல்வி தொடர்பாக பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை பகிர்ந்து கொள்வது அவசியமானதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதன் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் பள்ளி மேலாண்மைக்குழுவின் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். பள்ளி வளர்ச்சி சார்ந்த தேவைகள், கற்றல், கற்பித்தல் தொடர்பாக பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தொகுத்து கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு ஆலோசனைகளை பெற வேண்டும். இவ்வாறு கிராம சபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்ட தீர்மானங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் கிராம பஞ்சாயத்தும், கிராம மக்களும் தங்கள் பள்ளி சார்ந்த பிரச்னைகளையும், தேவைகளையும் அறிந்து தங்களின் பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
பள்ளி மேலாண்மைக்குழு தீர்மானங்கள் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அடுத்து வரும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும். பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் கிராம சபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு முதன்மை கருத்தாளர்கள் மற்றும் கருத்தாளர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள வேண்டும். ஆகவே, ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தின கிராம சபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு தீர்மானங்களையும் கூட்டப்பொருளில் இணைக்க வேண்டும் என்று அனைத்து கலெக்டர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரகம் அறிவுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளது.