திருப்பூர், ஆக.23: சுதந்தின தினத்தை போற்றும் வகையில், சைக்கிள் யாத்திரை மேற்கொண்டு, திருப்பூர் வந்த காந்தியவாதி கருப்பையாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரையை சேர்ந்த காந்தியவாதியான கருப்பையா, 77ம் ஆண்டு சுதந்திர தினத்தை போற்றும் வகையில், சேலம் மாவட்டம் மேச்சேரி பேரூராட்சியில் அமைந்துள்ள அமரத்தானூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து, திருப்பூரில் உள்ள கொடிகாத்த குமரன் நினைவகம் வரை கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று சைக்கிள் யாத்திரையை தொடங்கி, நேற்று (22ம் தேதி) யாத்திரையை நிறைவு செய்தார்.
சுமார் 125 கிலோ மீட்டர் பயணம் செய்து திருப்பூர் குமரன் நினைவகம் வந்தடைந்த அவருக்கு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், திருப்பூர் அரிமா சங்கம், மனித உரிமை கழகம் ஆகிய சங்கங்கள் இணைந்து சிறப்பான வரவேற்பு அளித்து யாத்திரையை முடித்து வைத்தனர். முன்னதாக அவர் திருப்பூர் குமரன் நினைவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து கருப்பையாவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஐயப்ப சேவா சங்கத் தலைவர் சுனில்குமார் குருசாமி, பொருளாளர் லோகநாதன், திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர்கணேஷ், அரிமா சங்க தலைவர் கணேஷ், செயலாளர் சஜேஸ், மனித உரிமைக்கழக செயலாளர் லட்சுமணசாமி, துணைச் செயலாளர் செல்வராஜ் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.