மொடக்குறிச்சி, ஜூலை 18: சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானுக்கு ரூ.1 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்படும். என தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் போர்ப்படை தளபதியாக விளங்கியவர் மாவீரன் பொல்லான். மாவீரன் பொல்லானின் 219வது நினைவு நாளையொட்டி அவர் வாழ்ந்த இடமான அரச்சலூர் அடுத்த ஓடாநிலை அருகே உள்ள ஜெயராமபுரத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயுத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு மாவீரன் பொல்லானின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
பின்னர் அமைச்சர் கூறும்போது, ‘‘சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்து தீரன் சின்னமலையின் படை தளபதியாக இருந்து பல வெற்றிகளை பெற காரணமாக இருந்துள்ளார். ஆங்கிலேயர்கள் போடும் திட்டத்தை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சென்று சேர காரணமாக இருந்தவர். முதலமைச்சர் ரூ.1 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும். மேலும், நிதி தேவைப்பட்டாலும் ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் தயாராக உள்ளார்.’’ இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், முன்னாள் எம்பி., கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ., சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் குணசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், திண்டல் குமாரசாமி, மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல், பேரூர் கழகச் செயலாளர்கள் அரச்சலூர் கோவிந்தசாமி, அவல்பூந்துறை சண்முகசுந்தரம், வடுகபட்டி விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.