கரூர், ஆக. 15: சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியிலும் நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மூன்றாவது நாளாக மாவட்டம் முழுவதும் 60.20 மிமீ மழை பதிவாகியுள்ளது. கோடை காலத்திற்கு நிகராக கடந்த சில நாட்களாக கரூரில் தினமும் வாட்டி வதக்கும் அளவுக்கு வெயில் வாட்டி வதக்கி வருகிறது. மே மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் வாட்டிய நிலையில், அதனை வலியுறுத்தும் வகையில் தற்போது வரையிலும் அதிகளவு வெயில் கரூரில் தலைகாட்டி அனைவரையும் சிரமப்படுத்தியது.
தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்களில் பெய்யும் மழைதான் ஆண்டு சராசரி மழையை எட்ட உதவும் என்பதால் இதுவரை குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யவில்லை. தற்போதைய நிலையில், காற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மூன்றாவது நாளாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து கரூரை குளிர்வித்துள்ளது. இந்த மழையின் காரணமாக இதமான சீதோஷ்நிலை நிலவியதால் அனைத்து தரப்பினர்களும் ஒரளவு சந்தோஷமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, கரூர் 23.80 மிமீ, அணைப்பாளையம் 4.20 மிமீ, க.பரமத்தி 32.20 (மற்ற பகுதிகளில் மழை பதிவாகவில்லை) என மாவட்டம் முழுதும் 60.20 மிமீ மழை பெய்துள்ளது. இதன் மொத்த சராசரி 5.02 ஆக உள்ளது.நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது நாளாக குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்துள்ள நிலையில், வரும் நாட்களிலாவது மேலும் கூடுதலாக மாவட்டம் மழையை பெற வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.