மணப்பாறை, செப்.12: மணப்பாறையை அடுத்த பொன்னம்பலப்பட்டி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிகவினர் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து தேமுதிக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணப்பாறையை அடுத்த பொன்னம்பலப்பட்டி சுங்கச்சாவடியில் தேமுதிக மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் மாவட்ட பொருளாளர் வசந்த் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த முற்றுகை ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் விலை ஏறிப்போச்சு, டீசல் விலை ஏறிப்போச்சு, சுங்கவரி ஏறிப்போச்சு, குறைத்திடுக குறைத்திடுக சுங்கவரியை குறைத்திடுக என்று ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் தேமுதிகவை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அவர்களை வையம்பட்டி போலீசார் கைது செய்து பின்னர் அனைவரையும் விடுவித்தனர்.