கும்மிடிப்பூண்டி, ஜூன் 5: சுகாதார வழிமுறைகளை பின்பற்றாததால் கும்மிடிப்பூண்டி பகுதியில் 2 கிளினிக்குகளுக்கு மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அதிரடியாக சீல் வைத்தார். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, எளாவூர், பெத்திகுப்பம், ஆரம்பாக்கம், சுண்ணாம்புகுளம், மாதர்பாக்கம், சாமிரெட்டிகண்டிகை, பூவலம்பேடு, உள்ளிட்ட பகுதிகளில் போலி மருத்துவர்கள், போலி கிளினிக்குகள், போலி மெடிக்கல் ஷாப் இயங்கி வருவதாகவும், அதில் ஒரு சிலர் செவிலியரை வைத்துக்கொண்டு மருத்துவம் பார்த்து உயிரிழப்பு ஏற்படுத்துவதாகவும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு தொடர்ந்து 17 மனுக்கள் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அம்பிகா சண்முகம் மற்றும் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் பிரியதர்ஷினி, சப் இன்ஸ்பெக்டர் பாபு, தனிப்பிரிவு போலீசார் ராமதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் திடீரென கும்மிடிப்பூண்டி சிப்காட் பைபாஸ் பகுதியில் உள்ள 2 மருத்துவமனைகளில் நேற்று சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது முறையான டாக்டர்கள், செவிலியர்கள், மருந்துக்கூடம், சுகாதார இயக்கத்தின் சார்பாக வழிகாட்டு முறைகள் ஆகியவை பின்பற்றப்படாமல் மருத்துவமனை செயல்பட்டது தெரிய வந்தது.
இது சம்பந்தமாக 2 தனியார் கிளினிக்குகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் பெத்திகுப்பம், சாமி ரெடி கண்டிகை, முனுசாமி நகர், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள சில தனியார் மருத்துவமனைகள் சுகாதார வழிகாட்டு முறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வருகின்றன என்றும், இதன் காரணமாக இப்பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு தரமற்ற மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இதனை முறையாக சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.