தேனி, நவ. 8: தேனி நகராட்சிக்குட்பட்ட 7 வது வார்டில் சுகாதாரத்தை மேம்படுத்திட வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி அமைப்பினர் தேனி நகராட்சி நகர் நல அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தேனி நகர இந்து எழுச்சி முன்னணி சார்பில், நகர செயற்குழு உறுப்பினர் அழகுபாண்டி தலைமையில் தேனி நகராட்சி நல அலுவலர் கவிப்பிரியாவிடம் கோரிக்கை மனு அளித்தார். இம்மனுவில் தேனி நகராட்சிக்குட்பட்ட 7 வது வார்டில் உள்ள அண்ணா நகர் முதல் தெருவில் சாக்கடை கழிவுகள் சுத்தம் செய்யாமல் சுகாதார கேடாக உள்ளது.
மேலும், இந்த வார்டில் பொதுச்சாலையை பலர் ஆக்கிரமிப்பு செய்து பூ செடிகளை போக்குவரத்துக்கு இடையூறாக வைத்துள்ளனர். எனவே, இப்பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்துவதுடன், சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள பூச்செடிகளை அகற்ற வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில், இந்து எழுச்சி முன்னணி தேனி நகர தலைவர் செல்வபாண்டியன், செயலாளர்கள் அய்யப்பன், தினேஷ், துணைசெயலாளர் கனகுபாண்டி, விஷ்வாபாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.