Wednesday, February 12, 2025
Home » சுகாதாரத்திலும் சுவிட்சர்லாந்து பெஸ்ட்டுதான்!

சுகாதாரத்திலும் சுவிட்சர்லாந்து பெஸ்ட்டுதான்!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்சுவிட்சர்லாந்து என்றவுடனே அதன் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகு சட்டென்று நினைவுக்கு வரும். உலக கோடீஸ்வரர்கள் எல்லாம் தங்கள் பணத்தைப் பதுக்குவார்களாமே என்ற செய்தியும் நினைவுக்கு வரும். இயற்கை அழகு, பாதுகாப்பான பண பரிவர்த்தனையைப் போல சுகாதார விஷயத்திலும் சுவிட்சர்லாந்து சிறப்பான நாடுதான்!அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றும், சில தன்னார்வ அமைப்புகளும் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் ஓர் ஆய்வில் சுவிட்சர்லாந்து சிறந்த வாழ்க்கைத் தரத்தை உடைய நாடாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சுகாதாரம், குறைவான வேலையில்லாத் திண்டாட்டம், பல நோபல் பரிசுகளை வென்றது, பார்த்து ரசிக்க அருமையான இயற்கைக் காட்சிகள் போன்ற காரணங்களோடு மேலும் பல காரணங்கள் உள்ளன. Mercer என்னும் சர்வதேச அமைப்பு ஆண்டுதோறும் நடத்தும் ஆய்வில் உலகளவில் தரமான வாழ்வை வழங்கும் இரண்டாவது நகரமாக சுவிட்சர்லாந்தின் சூரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பாவிலுள்ள ஆஸ்ட்ரியா நாட்டின் தலைநகரான வியன்னா இதில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தில் மக்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 79 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 84 ஆண்டுகளாகவும் உள்ளது. இந்நாட்டு குடிமக்கள் கட்டாய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் மூலம் காப்பீடு பெற்றுள்ளனர். இதன் மூலம் அனைவரும் பரவலாக நவீன மருத்துவம் கிடைக்க உதவுகிறது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.78 சதவிகிதமாகவும், குழந்தை பிறப்பு விகிதம் 1000-க்கு 10.48 சதவிகிதமாகவும், குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 3.73 சதவிகிதமாகவும் உள்ளது. மற்ற ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் இங்கு சுகாதாரநிலை மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரம் சிறப்பாக உள்ளது. பிளாஸ்டிக் மற்றும் குப்பைக் கூளங்களை மறுசுழற்சி செய்வதில் உலகின் சிறந்த நாடாக உள்ளது. இங்கு மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களில் 66% முதல் 96% வரை மறுசுழற்சி செய்யப்படுகின்றன. சுவிட்சர்லாந்து நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்டுள்ள ஒரு மத்திய ஐரோப்பிய நாடு. இந்நாட்டின் தெற்கில் சுவீஸ் ஆல்ப்ஸ், சுவிஸ் பீடபூமி, வடக்கில் ஜீரா மலைகள் உள்ளன. இங்கு அதிகமான பள்ளத்தாக்குகளும் எண்ணற்ற அருவிகளும் உள்ளன. ஜெனிவா ஏரி, ஜூரிச் ஏரி, நியூசாடெல் ஏரி மற்றும் கான்ஸ்டன்ஸ் ஏரி போன்ற பெரிய; ஏரிகள் உள்ளன. இந்நாடு அதிகப்படியான மேய்ச்சல் புல்வெளிகளை உடையது. இங்கு கிடைக்கும் சுவையான உணவாகிய Fondue என்னும் சீஸை உருக்கி அது உருகிக் கொண்டிருக்கும்போதே அதில் ஒரு துண்டு ரொட்டியைத் தொட்டு சாப்பிடும்போது சீஸைப் போலவே மனமும் உருகிப்போகுமாம். ஃபாண்ட்யு, ரேக்லெட் மற்றும் ரோஸ்ட்டி போன்ற உணவுகள் நாடு முழுவதும் கிடைக்கின்றன. பால் பொருட்கள் மற்றும் க்ரையர், எம்மண்டல், பாலாடைக் கட்டிகள் போன்றவை முக்கிய உணவுப் பொருட்களாக உள்ளன. இந்நாட்டில் 18-ஆம் நூற்றாண்டிலிருந்து சாக்லேட் தயாரிப்பு நடைபெறுகிறது. வாலெய்ஸ், வாயூத், ஜெனிவா மற்றும் டிசினோ ஆகிய பகுதிகளில் சுவிஸ் ஒயின் தயாரிக்கப்படுகிறது. இன்றும் சுவிட்சர்லாந்து என்றால் நமக்கு நினைவுக்கு வருபவர் William Tell. இவர் தனது மகனின் தலையில் ஒரு ஆப்பிளை வைத்து, சரியாக அதை அம்பினால் இரண்டு துண்டாக்கினார் என்பது எல்லோருக்கும் நினைவிருக்கும். விலை மதிப்புள்ள குங்குமப்பூ, பலவகை ஒயின் திராட்சைகளும் இங்கு பயிரிடப்படுகிறது. உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக உள்ள இந்நாடு, உலக செஞ்சிலுவைச் சங்கம், உலக வர்த்தக அமைப்பு போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ;இந்நாட்டின் மொத்த பரப்பளவு 41,290 ச.கி.மீ. இந்நாட்டில் 1,638 கி.மீ. அதிநவீன சாலைகள் உள்ளன. ஜூரிச் விமான நிலையம் நாட்டின் மிகப் பெரிய விமான நிலையமாக உள்ளது. இங்கு 5,063 கி.மீ நீளம் கொண்ட ரயில்வே போக்குவரத்து உள்ளது. சுவிட்சர்லாந்தில் மின்சாரம் நீர் மூலமாக 56 சதவிகிதமும், அணுசக்தி மூலமாக 39 சதவிகிதமும் உற்பத்தி செய்யப்படுகிறது. 2014-ம் ஆண்டு கணக்குப்படி மக்கள் தொகை 80 லட்சத்து 61 ஆயிரத்து 516 ஆக உள்ளது. அதில் 22% பேர் குடியேறிய வெளிநாட்டினர், 17.3% பேர் இத்தாலியர்கள், 13.2% பேர் ஜெர்மானியர்கள், 11.5% பேர் செர்பியர்கள். இந்நாட்டில் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலிய மற்றும் ரோமன்ஸ் பண்பாடுகள் வழக்கத்திலுள்ளன. இங்கு கேளிக்கை நிகழ்ச்சிகள் நிறைய நடைபெறுகின்றன. திரைப்படங்கள், நாட்டுப்புறக் கலைகள் உயிர்ப்புடன் உள்ளன. இசை, நடனம், கவிதை, மரச் சிற்பக்கலை மற்றும் சித்திர தையல் கலை போன்றவை இங்கு பெரிதும் வளர்ச்சி நிலையில் உள்ளது!– க.கதிரவன்

You may also like

Leave a Comment

8 + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi