Friday, June 2, 2023
Home » சுகமான வாழ்வருளும் சுவாமிமலை முருகன்

சுகமான வாழ்வருளும் சுவாமிமலை முருகன்

by
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் நான்கும் நான்கும் முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளில் சுவாமிமலை எனும் இந்த திருத்தலம் நான்காவது. ‘‘முருகப் பெருமான் எப்போதும் நீங்காமல் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்கள் நான்கு. அவற்றில் நான்காவதான திருத்தலம், ஏரகம் எனும் சுவாமிமலை’’ என இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில், “சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ‘ஏரகமும்’ நீங்கா இறைவன்’’ எனப் பாடுகிறார்.நான்கும் நாற்பதும் நான்காவது படைவீடான இந்த சுவாமி மலையில் எழுந்தருளி இருக்கும் முருகப்பெருமானை, நாற்பது திருப்புகழ்ப் பாடல்களால் துதித்துப் பாடியிருக்கிறார். நான்கும் நான்முகனும் நான்காவது படைவீடான சுவாமி மலை உருவாகக் காரணமே, நான்கு முகங்கள் கொண்ட நான் முகனான பிரம்மாதான். `ஓம்’ என்பதற்குப் பொருள் தெரியாத நான்முகனைக் குட்டிச் சிறைவைத்து, அதன்பின் சிவபெருமானுக்கு ‘ஓம்’ என்பதன் பொருளை முருகப் பெருமானே சொன்ன, நான்காவது படைவீடு சுவாமிமலை.பாத தரிசனம் அருணகிரிநாதர் இந்த தலத்திற்கு வந்தபோது, முருகப்பெருமானின் பாத தரிசனம் காண வேண்டினார். தன் பாத தரிசனம் காட்டி, அருணகிரிநாதரின் வேண்டுகோளை முருகப்பெருமான் நிறைவேற்றிய திருத்தலம் இது. ‘தகையா தெனக்குன் அடி காண வைத்த தனி ஏரகத்தின் முருகோனே’ எனத் திருப்புகழில் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.அருணகிரிநாதருக்கு அறிவிப்பு அருணகிரிநாதர் முக்தி அடைந்த நாள் எது என்று, கருத்து வேறுபாடு இருந்தபோது, இங்கு சுவாமிமலை வந்து முருகப்பெருமானைத் தரிசித்த வள்ளிமலை சுவாமிகள் சந்நதியில் நின்றபடியே, ‘‘அருணகிரிநாத சுவாமிகள் முக்தி அடைந்த தினம் எது?’’ என்று கேட்டார். முருகப்பெருமான், சுவாமிநாதன் சந்நதியில் இருந்து, ‘‘அந்த நாள் கார்த்திகை மாதம் மூல நட்சத்திரம் கூடிய நன்னாள்’’ என்று பதிலளித்தார். நம் கால நிகழ்வு இது.தீர்த்தங்கள் ஐந்துவஜ்ர தீர்த்தம் (கிணறு), குமாரதாரை (காவிரி ஆறு), சரவண தீர்த்தம், நேத்திர புஷ்கரணி, பிரம்ம தீர்த்தம் என ஐந்து விதமான புண்ணிய தீர்த்தங்கள் இங்குள்ளன.சிவன் உண்டாக்கிய தீர்த்தம்வஜ்ர தீர்த்தம்! இது ஒரு கிணறாக உள்ளது. சிவபெருமான் தம் சூலாயுதத்தால் உருவாக்கினார். அபிஷேகத்திற்கு உண்டான தீர்த்தம் இது. ரவி மித்திரன் என்பவர் இந்த தீர்த்தத்தில் நீராடி, பித்ரு கடன்கள் செய்து, தன் குலத்தை ஈடேற்றினார். அடுத்து… வசு என்பவர் ஆண் வடிவம் நீங்கிப் பெண் வடிவாக மாறினார். அவர் மனைவி காந்திமதி வருந்தினாள். நாரதர் சொற்படி வசு இங்கு வந்து, இந்த வஜ்ர தீர்த்தத்தில் நீராடி, மீண்டும் ஆணாக மாறினார். மகப்பேற்றையும் அடைந்தார். உடல் நோயைப் போக்கி மகப்பேறு அருளும் சக்தி வாய்ந்தது இந்த தலம்.கங்கை காவிரியில்குமாரதாரை என்ற காவிரி ஆறு தெற்கு சந்நதி நேரில் உள்ளது. கங்கை இங்கு வந்து, மக்கள் தன் மீது கழுவி விடும் பாவத்தை நீக்க முருகப்பெருமானின் (சுவாமிநாத) அருளைப் பெற்றாள். வந்த கங்கை முருகனை விட்டுப்பிரிய மனம் இல்லாமல் தாரையாக – நீர்ப்பெருக்காகக் காவிரியில் கலந்தாள். கங்கை, காவிரியில் கலந்த இடம் ‘குமாரதாரை’ என அழைக்கப்படுகிறது.சாப நீக்கம் தரும் சரவண தீர்த்தம்இந்த பெயர் கொண்ட குளம் கோயிலுக்கு வடகிழக்கே, அமைந்துள்ளது. ஜமதக்னி முனிவரின் சாபம் பெற்ற, சரவணன் என்ற சிறுவனின் தந்தை கரடியாக ஆனார். தந்தை பெற்ற சாபம் நீங்க, பிள்ளையான சரவணன் இங்கு வந்து, இந்தத் தீர்த்தத்தில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டு, தந்தையின் சாபம் நீங்கப் பெற்றான். அடுத்தவர்க்காக நாம் வேண்டுதல் செய்தால் பலிக்கும் தலம் இது.பார்வை அருளும் நேத்திர புஷ்கரணிகோயிலின் முன்னால் நேர் கிழக்கில், கீழ வீதியில் அமைந்துள்ளது. முருகப் பெருமான் திருக்கரத்தில் உள்ள ஞானசக்தியான வேலாயுதத்தால் உண்டாக்கப்பட்டது இது. ‘சுவாமி புஷ்கரணி’ என்றும் அழைப்பார்கள். இரு கண் களையும் இழந்த சுமதி என்பவர் பரத்வாஜமுனிவரின் சொற்படி இங்கு வந்து, இந்த தீர்த்தத்தில் நீராடி, முருகனை வழிபட்டுப் பழையபடியே பார்வையைப் பெற்றார். அதன் காரணமாக இது ‘நேத்திர புஷ்கரணி’ என அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல், ‘சப்த ரிஷி வாக்கியம்’ எனும் ஜோதிட நூலில், பரிகார காண்டத்தில் இந்த தீர்த்தம் மிகச் சிறப்பாகச் சொல்லப் பட்டுள்ளது.ஞான உபதேச – பிரம்ம தீர்த்தம்‘ஓம்’ என்பதற்குப் பொருள் தெரியாத பிரம்மதேவர், முருகனால் தண்டிக்கப்பட்டு விடுதலை பெற்றபின் இங்கு வந்து, தன் பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் – பிரம்ம தீர்த்தம் என்றும், அவரால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்ட சிவலிங்கம் – பிரம்மேஸ்வரர் என்றும் அழைக்கப் படுகிறது. அதன் பின் பிரம்மதேவர், சுவாமி நாதனான முருகப்பெருமானை வழிபட்டு, பிரணவ அர்த்தங்களை அறிந்தார். ஞான உபதேசம் பெற, அற்புதமான திருத்தலம் இது.  கண் கொடுத்த விநாயகர்பிறவியிலேயே பார்வை அற்ற, கொங்கு நாட்டைச் சேர்ந்த ஒருவர் சுவாமிமலை வந்து, ஒருநாள் முழுதும் உணவு கிடைக்காமல் பட்டினி இருந்தார். மறுநாள் அதிகாலையில் குமாரதாரை எனும் காவிரியில் நீராடி, கிரி பிரதட்சிணம் – மலை வலம் செய்து நேத்திர புஷ்கரணியில் மறுபடியும் நீராடி மலைமேல் ஏறினார். விநாயகர் முன்னால் நின்று வணங்கினார். வழிகாட்டியாக வந்தவர்கள், ‘‘இது விநாயகர் சந்நதி’’ என்றார்கள். பார்வையற்றவர் வேண்ட, அப்பொழுதே விநாயகரின் அருளால், அவர் பார்வை பெற்றார். அன்று முதல் இந்த விநாயகர் ‘நேத்திர விநாயகர்’ என்றும் ‘கண் கொடுத்த விநாயகர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் வரப்பிரசாதி. இந்த விநாயகர் மேலே துவஜ ஸ்தம்பத்தின் – கொடி மரத்தின் அருகில் இருக்கிறார்.வேண்டியதை நிறைவேற்றும் சந்நதிகள்மதுரை அரசரும், மகா சிவபக்தருமான வரகுண பாண்டியன் இங்கு வந்து தங்கினார். அவர் நாள்தோறும் அன்னை மீனாட்சியையும், சுந்தரேஸ்வரரையும் தரிசித்து வழிபடாமல் உணவு உண்பதில்லை என்ற வழக்கம் கொண்டவர். அதன் காரணமாக அன்னை மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சோமசுந்தரரான சிவபெருமானும் அன்னை மீனாட்சியுடன் தரிசனம் தந்து, வரகுணபாண்டியரின் விருப்பத்தை நிறைவேற்றினார். நினைத்ததை நிறைவேற்றும் இந்த சந்நதிகள் மலையின் கீழ்ப்பக்கம் அமைந்துள்ளன.மயில் இடத்தில் யானைவழக்கப்படி முருகன் ஆலயங்களில் முருகன் முன்னால் மயில் இருக்கும். இங்கோ, முருகன் முன் மயிலுக்குப் பதிலாக தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் எனும் வெள்ளை யானை நிறுத்தப்பட்டுள்ளது. ஹரிகேசன் எனும் அரக்கனால் அனைத்தையும் இழந்த தேவேந்திரன், இங்கு வந்து சுவாமிநாதனை – முருகப்பெருமானை வழிபட்டு, முருகன் அருள் பெற்று அரக்கனை அழித்து, இழந்த அனைத்தையும் திரும்பப் பெற்றார். அதன் காரணமாகத் தன் யானையான ஐராவதத்தை – வெள்ளை யானையை நன்றி அறிவிக்கும் முகமாக இங்கு நிறுத்தினார். அந்த வெள்ளை யானை, மயில் இருக்க வேண்டிய இடத்தில் இங்கே உள்ளது. இழந்ததை மீட்டுத்தரும் திருத்தலம் இது.நாமும் வேண்டுவோம்! நல்லவைஅனைத்தையும் பெறுவோம்!

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi