சீர்காழி, ஆக.17: சீர்காழி பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு சமூக நலன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியின் 2000க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள்உறுதிமொழி ஏற்க, பேச்சுப்போட்டி, விளம்பரத் தட்டி எழுதும் போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.
மேலும் மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி தலைமையில், துளசிரங்கன், சீனிவாசன் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சீர்காழி ரோட்டரி சங்கத் தலைவர் கணேஷ், செயலர் ராஜிக் பரித், முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசு, ராஜேந்திரன், சண்முகம், பாலமுருகன், நடராஜ், வருவாய் ஆய்வாளர் மாதவன் ஆகியோர் பரிசு வழங்கினர்.
மேலும் சிறப்பு பேச்சாளராக அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனவேந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி ஓவியாசிரியர் கண்ணன், முதுகலை ஆசிரியர்கள் முருகபாண்டியன், ரங்கநாதன், உடற்கல்வி ஆசிரியர் முரளி ஆகியோர் செய்து இருந்தனர்.