சீர்காழி, அக்.20: சீர்காழி நகராட்சி 3வது வார்டு பூந்தோட்ட தெருவில் சாட்டை வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் மழைக் காலங்களில் வடிகால் வாய்க்காலாக இது இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வாய்க்கால் சுமார் 20 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் மழைநீர் வடிய வழியில்லாமல் வீடுகளில் புகுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாட்டை வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வார வேண்டுமென தொடர்ந்து அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி உறுப்பினர் கஸ்தூரிபாய், ஆணையர் ஹேமலதாவிடம் இந்த வாய்க்காலை தூர்வாரக்கோரி மனு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், நகரமைப்பு ஆய்வாளர் மரகதம், ஆகியோர் நேரடியாக சென்று வாய்க்காலை ஆய்வு செய்தனர். பின்னர் விரைவில் வாய்க்காலை தூர்வாரி தருவதாக பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையர், நகர மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் ஆகியோருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.