சீர்காழி,ஆக.11: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சியாமளா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் போதை இல்லா சமுதாயத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சீர்காழி இன்ஸ்பெக்டர் சிவகுமார் கலந்து கொண்டு பேசுகையில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்க மாணவர்களால் மட்டுமே முடியும். எனவே மாணவர்கள் இங்கு உறுதிமொழி எடுத்துக் கொண்டு தங்கள் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுவதோடு தங்கள் இல்லத்திலும் மற்றும் உறவினர்கள் நண்பர்களுக்கும் போதை பழக்கத்தின் தீமைகள் குறித்து எடுத்துரைத்து போதை பழக்கத்திலிருந்து அவர்களை மீட்டெடுக்க சிறு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்தால் வருங்கால சமுதாயம் போதையில்லாத மற்றும் போதைப்பொருள் எதற்கும் அடிமை ஆகாத சமுதாயம் உருவாக்க முடியும் என்றார். தொடர்ந்து போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவது குறித்தும் காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி காவல் ஆய்வாளர்கள் ஜெயகிருபா, சீனிவாசன் பள்ளி தலைமை ஆசிரியர் கீதா மற்றும் பள்ளி ஆசிரியைகள் உடன் இருந்தனர்.