சீர்காழி, ஜூலை 2: சீர்காழி கழுமலையாற்றில் குறுவை சாகுபடிக்கு பாசன நீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரின் வழியாக பாசன வாய்க்காலான கழுமலையாறு செல்கிறது . இந்த பாசன வாய்க்கால் மூலம் கொண்டல், வள்ளுவக்குடி, அகணி,திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி,சிவனார்விளாகம் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 6 ஆயிரம் ஏக்கரில் பாசன வசதி நடைபெறுகிறது.
தற்போது காவேரி டெல்டா பகுதி பாசனத்திற்கு மேட்டூரிலிருந்து கடந்த 12ம் தேதி தமிழக முதல்வர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார். தொடர்ந்து கடை மடை பகுதிக்கு பாசனத்திற்கு தண்ணீர் வருவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் கழுமலையாறு பாசன வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் விடப்பட்டது. இதையடுத்து சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டு பகுதியில் உள்ள கழுமலையாறு பாசன வாய்க்கால் ஷட்ரஸிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.
நீர்வளத்துறை உதவிசெயற்பொறியாளர் கனகசரவணசெல்வன் அறிவுறுத்தலின்படி, இளம் பொறியாளர் தாமோதரன் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார். இதனை விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன்,கழுமலையாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் கோவிநடராஜன், நிர்வாகிகள் விஜயக்குமார்,பாஸ்கரன் செல்வம் கலந்து கொண்டனர்.